அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாகவும், கவுரவமானதாகவும் இருக்காது என்று ஈரானின் மத தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒத்துழைப்பதற்கான முயற்சிகள் பல முறை நடந்தும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை.
2018ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அமெரிக்கா ஈரானுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.
இந்த சூழலில், தற்போது மீண்டும் அமெரிக்கா ஈரானை அதிகபட்ச அழுத்தத்திற்கு உட்படுத்த முந்தைய அரசின் திட்டத்தையே தொடர்கிறது. அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் மீது மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் விதமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், இதே நேரத்தில், ஈரானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் கடற்படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஈரான் மத தலைவர் அயதுல்லா அலி காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், “அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாகவும், கவுரவமானதாகவும் இருக்காது. எனவே, அத்தகைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது” என்று கூறியுள்ளார்.
ஈரான் தனது அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், எந்த ஒரு வெளிநாட்டு அழுத்தத்தையும் ஏற்க முடியாது என்றும் கடந்த மாதம் ஈரான் அரசு அறிவித்தது. இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அமெரிக்கா, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் பொருளாதார ஆதாரங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையும் சூழல் உருவாகி உள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை பற்றிய விவாதங்கள் சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

உலகம்
“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம் – ஈரான் மத தலைவரின் அதிரடி அறிவிப்பு!”
“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம் – ஈரான் மத தலைவரின் அதிரடி அறிவிப்பு!”
- February 8, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this