டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெறும் நிலையில் முன்னிலை வகித்து வருகிறது. 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், பாஜக அந்த எண்ணிக்கையை தாண்டி முன்னிலை வகிக்கிறது. இதனால், டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த முதலமைச்சராக யார் இருப்பார்கள் என்ற விவரங்களை பார்க்கலாம்:
1. துஷ்யந்த் குமார் கௌதம்:
கரோல் பாக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ள துஷ்யந்த் குமார் கௌதம், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், தலித் சமூகத்திலிருந்து வந்த தலைவரும் ஆவார். 67 வயதான இவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அரசியல் மற்றும் சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இவர், முதல்வர் பதவிக்கான ஒரு முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.
2. பர்வேஷ் வர்மா:
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான இவர், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புது டெல்லி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். 8 வது சுற்று முடிவில் 300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், பாஜகவின் சமூக கணக்கீடுகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார்.
3. அர்விந்தர் சிங் லவ்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட இவர், தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தவர். முன்னாள் அமைச்சராக இருந்த இவர், கட்சிக்குள் ஒரு முக்கியமான தலைவராக கருதப்படுகிறார்.
4. விஜேந்தர் குப்தா:
மூத்த பாஜக தலைவரான இவர், டெல்லியில் கட்சியின் முக்கிய ஆளுமையாக இருக்கிறார். 2015, 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ரோகிணி தொகுதியில் வெற்றி பெற்றவர். டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். அரசியல் அனுபவம் காரணமாக முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார்.
5. சதீஷ் உபாத்யாய்:
மாளவியா நகர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர். அரசியல் மற்றும் வணிகத் துறையில் அனுபவம் கொண்ட இவர், முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
முதல்வர் தேர்வுக்காக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசித்து இறுதியாக முடிவெடுப்பார்கள். பாஜக டெல்லியில் ஆட்சி அமைத்தால், புதிய முதலமைச்சர் யார் என்பது பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
“டெல்லியில் பாஜக ஆட்சி உறுதி? – அடுத்த முதல்வர் யார்? பரபரப்பு!”
