டெல்லியில் மூன்றாவது முறையாகக் காங்கிரஸ் முற்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 2000-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களிடம் அடிக்கடி அவுட் ஆகியதைப் போன்று, தொடர்ந்து மூன்று தேர்தல்களில் 0 இடங்களுடன் காங்கிரஸ் “டக் அவுட்” ஆகி விட்டது. இந்த தோல்வி, “கூட்டணி இல்லையென்றால், காங்கிரஸ் இல்லை” என்ற கேள்வியை எழுப்புகிறது.
கூட்டணி இல்லாமல், டெல்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றியைப் பெற முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கலாம். இந்தியா கூட்டணியில் பாஜகவிற்கு எதிராக வலுவான ஒருமைப்பாடு இருந்தால், தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை.
டெல்லியில் பாஜக வென்ற தொகுதிகளில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளே பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளன. இதன் மூலம், பாஜக வெற்றிக்கு காங்கிரஸின் தனித்து நிற்கும் முடிவே ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது.
தற்போது, காங்கிரஸ் தனது வலுவான நிலையை ஜார்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் மட்டுமே தக்கவைத்துள்ளது. ஆனால், கேரளாவில் உள்ளஉட்கட்சி பூசல் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கிறது. ஜார்கண்டில் கூட்டணி ஆதரவாக செயல்படுகிறது. கர்நாடகாவில் கட்சிக்குள் உள்ள முரண்பாடுகள் கடுமையாகத் தொடர்கின்றன.
தமிழ்நாட்டில், திமுகவின் ஆதரவால் மட்டுமே காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் பக்கம் செல்லும் என்பதால், திமுக காங்கிரசை விட்டுக்கொடுக்காது. இதற்கு ஸ்டாலின்-ராகுல் காந்தி இடையிலான உறவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களில், காங்கிரசுக்கு வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை. ஜெகன்மோகன் ரெட்டி, மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை கட்சியில் இணைத்து, கூட்டணி உறவை பராமரிக்க காங்கிரசால் முடியவில்லை.
இதனால், தேசிய கட்சி என்ற பந்தாவில் இருந்து இறங்கி, மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின் ஆதரவுடன் பயணிக்க வேண்டும் என்ற அழுத்தம் காங்கிரசுக்கு அதிகரித்துவருகிறது.
காங்கிரசின் தற்போதைய மிகப்பெரிய தேவை தலைமை மாற்றத்தை விட, மாநிலக் கட்சிகளுடன் நல்ல தோழமையை உருவாக்குவதுதான். அப்படியென்றால்தான் பாஜகவிற்கு எதிராக வெற்றிபெற முடியும். இல்லையெனில், தனித்து காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த முடியாது என்பதே தற்போதைய அரசியல் நிலைமை காட்டும் உண்மை.


Related Post

Leave feedback about this